July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஈரான் அதிபருக்கு அமெரிக்கா இரங்கல்

1 min read

US mourns Iranian president who died in helicopter crash

21.5.2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (வயது 63), நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும், இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் ஈரான் புறப்பட்டார். அந்த ஹெலிகாப்டர் நெக்ரானில் இருந்து 600 கி.மீ. தூரத்தில் ஈரான் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள வாசகான் மற்றும் ஜோல்பா இடையே மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. தகவல் தொடர்பும் அதிரடியாக துண்டிக்கப்பட்டது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? என்ற சந்தேகத்தில் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடும் பனிமூட்டம், கனமழை காரணமாக மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மாயமானதாக கூறப்பட்ட இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக உசி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதாக முதலில் கூறப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்று தேடியபோது, அங்கு தரை இறங்கியதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.எனவே அதிபரின் கதி என்ன? என்பது தெரியாமல் மீட்புப்பணியில் சிக்கல் நீடித்தது. இதற்கிடையே துருக்கி மற்றும் ரஷியாவின் ஆளில்லா விமானம் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் கிழக்கு அஜர்பைஜான் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

நீண்ட நேரமாக நீடித்த தேடுதல் வேட்டைக்கு பின்னர், ஹெலிகாப்டர் உடைந்து எரிந்த நிலையில் பாகங்கள் சிதறி கிடந்தது தெரியவந்தது. உடனே மலையேறும் வீரர்கள் மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் உயிரிழந்து விட்டதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதில் சென்ற 9 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்து விட்டனர். அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான செய்தி அறிந்த அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரான் நாடே சோகமயமாகி உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஈரான் நாட்டின் அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்றதில் இருந்து இஸ்ரேல் நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். சமீபத்தில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் 2 நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலியாகி இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதே சமயம் இந்த விபத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அதிபர் மரணம் அடைந்ததால், இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் முகமது மொக்பர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார். ஈரான் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர் இறந்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே ஜூலை மாதத்துக்குள் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

ரஷிய அதிபர் புதின் இரங்கல்

ஈரான் அதிபர் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ரஷியாவின் உண்மையான நண்பர் ரைசி’ என்று புகழாரம் சூட்டியுள்ளார், இதேபோல் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈரான் அதிபருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். எனவே நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் உள்ள தேசியகொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். இன்று நடைபெற இருந்த அரசு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா இரங்கல்

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெளியிட்ட அறிக்கையில், “வடமேற்கு ஈரானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் அவர்களது தூதுக்குழு உறுப்பினர்களின் மரணத்திற்கு அமெரிக்கா தனது உத்தியோகபூர்வ இரங்கலைத் தெரிவிக்கிறது. ஈரான் ஒரு புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் போது, ஈரானிய மக்களுக்கும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்துக்கான அவர்களின் போராட்டத்திற்கும் எங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.