நாளை வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
1 min read
Vaikasi Visakha festival tomorrow: Devotees throng Tiruchendur
21.5.2024
முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு திருவிழா நாளை (புதன்கிழமை) வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினமான நாளை நடைபெறும் விசாக திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஒரு வருடம் அதாவது 12 மாதம், மாத கடைசியில் வரும் மாதாந்திர வெள்ளிக்கிழமை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் நாளை நடைபெறும் விசாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்தவாறு உள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15மணிக்கு இராக் கால அபிஷேகமும் நடக்கிறது.
விசாக திருவிழாவான நாளை (புதன்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக் கால அபிஷேகம் நடக்கிறது.
நாளை மறுநாள் (வியாழக் கிழமை) வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.