July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

முல்லை பெரியாறு விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

Mullai Periyar Issue: Letter from Chief Minister M.K.Stal to Central Govt

24.5.2024
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ்-க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு, கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் இந்த கருத்துருவை, இனி நடக்கவுள்ள கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளது. தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

தற்போதுள்ள அணை, அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என்று பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு 27.2.2006 மற்றும் 7.5.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதைத் தெளிவுபடுத்தியுள்ளது. பின்னர் 2018-ம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.

புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி தேவை என்று சுப்ரீம் கோர்ட்டு அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.

இந்தப் பிரச்சினையில் எங்களது ஆட்சேபனைகளை தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே விரிவாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், கோர்ட்டு அவமதிப்பு மனுக்கள் உள்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கவுள்ளோம்.

எனவே 28.5.2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளை நீக்க வேண்டும்; எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலாளருக்கும் நீங்கள் உத்தரவிட வேண்டும். சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.