கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் பிறந்தநாள் விழா கோலாகலம்
1 min read
Thiruvalluvar birthday party at Governor’s House
24.5.2024
திருவள்ளுவருக்கு பிறந்த நாள் கொண்டாடும் நோக்கில் கடந்த 1935ம் ஆண்டு ஜனவரியில், பேராசிரியர் நமச்சிவாய முதலியார் தலைமையில், பத்மஸ்ரீ சுப்பையா பிள்ளை, சிவக்கண்ணு பிள்ளை மற்றும் சிலர் சேர்ந்து, ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்ற அமைப்பை துவக்கினர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும் அவர் மறைந்த நாளாக மாசி உத்திர நாளும் கடைப்பிடிக்கப்பட்டன.
அந்த நடைமுறையை ஏற்று திருவள்ளுவர் திருநாட் கழகம் சார்பில் 1935ம் ஆண்டு மே 18, 19ம் தேதிகளில் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் தமிழக புலவர்களை வரவழைத்து, மறைமலை அடிகள் தலைமையில் பெரும் கூட்டம் கூட்டி திருவள்ளுவரின் பிறந்த நாளை கொண்டாடினர்.
கருணாநிதி முதல்வரான பின் 1971ம் ஆண்டு முதல் தை 2ம் தேதி திருவள்ளுவர் தினமாக மாற்றி அமைத்துவிட்டார். இவருக்கு தேசிய சிந்தனையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், திருவள்ளுவர் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறையை பின்பற்றி, வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர தினமான இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் திருநாள் விழாவை ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவில் முதன்முதலில் ஆளுநர் குத்துவிளக்கு ஏற்றினார். அதன்பின் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி வணங்கினார்.
இதனை அடுத்து சுப்புஆறுமுகம் அவர்களின் மகள் பாரதியின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் திருவள்ளுவர் குறித்த மின்னணு நூலை ஆளுநர் வெளியிட்டார்.
அதன்பின்மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் நிர்வாக சேயான், திருவள்ளுவர் திருநாள் கழகம் பேராசிரியர் தியாகராஜன், மலேசியா கோலாலம்பூர் ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தைச் சேர்ந்த சுவாமி மகேந்திரா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை உரையாற்றினார்.
விழா இறுதியில் தமிழ் பாரம்பரிய முறையில் சாப்பாடு வழங்கப்பட்டது.
.