வங்கதேசம் – மே.வங்கம் இடையே இன்று நள்ளிரவு ரீமல் புயல் கரையைக் கடக்கிறது
1 min read
Cyclone Rimal is crossing the coast between Bangladesh and West Bengal at midnight today
26.5.2024
வங்கக் கடலில் உருவான ரீமல் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மேற்கு வங்கம் – வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் பருவமழைக்கு முந்தைய முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரீமல் என்றால் அரபி மொழியில் ‘மணல்’ என்று பொருள். ஓமன் நாடு இந்தப் பெயரை வைத்துள்ளது.
ரீமல் புயலால் மே 26, 27 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், ரீமல் புயல் காரணமாக வடகிழக்கு இந்திய பகுதிகளில் மே 27, 28 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மழை: மேலும், தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பக்காலி, சாகர் தீவுகள் மற்றும் நாம்கானா உள்ளிட்ட மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புயல் கரையை நெருங்கும் நிலையில், கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்றும் கூறியுள்ளது.
7 கிமீ வேகத்தில் நகரும் புயல்: புயல் எச்சரிக்கை குறித்த வானிலை ஆய்வு மையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
ரீமல் புயல் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. காலை 8.30 மணி நிலவரப்படி, புயல் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு தெற்கு – தென்மேற்கில் 260 கி.மீ., தொலைவிலும், மோங்கலாவுக்கு தெற்கே 310 கி.மீ., தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 240 கி.மீ., தொலைவிலும், கன்னிங்லிருந்து 280 கி.மீ., தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையில் கரையைக் கடக்கும். அப்போது அதன் வேகம் மணிக்கு, 110 – 120 கி.மீ, வேகத்தில் இருக்கும்.
இவ்வாறு கூறியுள்ளது.
புயலை முன்னிட்டு மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் தெற்கு 24 பர்கானஸ் பகுதிகளுக்கு மே 26, 27 தேதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.