பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 2 ஆயிரம் பேர் பலி: மோடி இரங்கல்
1 min read
2 thousand dead in Papua New Guinea landslide: Modi condoles
28.5.2024
பப்புவா நியூ கினியாவில் உள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் வெளுத்து வாங்கிய மழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. குறிப்பாக, காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் அங்கு வசித்த பலரும் உயிருடன் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த மீட்புப்படையினர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாயமான பலரை தேடும் பணி நடந்துவருகிறது.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பப்புவா நியூ கினியாவிற்கு தேவையான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.