தலைவன்கோட்டை இராணுவ வீரர் சாலை விபத்தில் பலி
1 min read
Thalaivankota Army soldier killed in road accident
28.-5.2024
தென்காசி, மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன் கோட்டை பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் சாலை விபத்தில் பலியானார்.அவரது உடலுக்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன் கோட்டை மேலத்தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 23)
இராணுவ வீரரான இவர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த நிலையில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.அவரது உடல் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது…
இராணுவ வீரர் சதீஷ்குமார் அருணாசல பிரதேசம் மாநிலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த நண்பரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றபோது ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலக்குடி அருகே உள்ள பழனி கோட்டையைச் சேர்ந்த நண்பர் கபிலேஸ்வரன்,(வயது 22) என்பவரும் நெல்லையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
அப்போது அவர்கள் நெல்லை அருகே உள்ள பொன்னாக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்புச் சுவரில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் கபிலேஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவரது உடல் பாளை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன்படி ராணுவ வீரர் சதீஷ்குமாரின் உடல் தலைவன்கோட்டை கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தலையில் அடித்து கதறி அழுத சம்பவம் அங்கு நின்று இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
அதனைத்தொடர்ந்து இராணுவ வீரர் சதீஷ்குமார் உடலுக்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.