உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு பெரும் வீழ்ச்சி-அரசியல் நோக்கர்கள் கருத்து
1 min read
Big fall for BJP in Uttar Pradesh- Politicians comment
4.5.2024 –
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இங்குதான் அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவு அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.
2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜனதா இங்கு அதிக இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைத்தது. 2014-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா 71 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அந்த கட்சி கூடுதலாக 61 இடங்களை அப்போது கைப்பற்றி இருந்தது. 2019 தேர்தலில் பா.ஜனதாவுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இது 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 9 இடங்கள் குறைவாகும்.
இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு உத்தரபிரதேசத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி அந்தக்கட்சி 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
மொத்தம் உள்ள 80 இடங்களில் பா.ஜனதா 75 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 இடங்களில் அப்னாதளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி கட்சிகள் களத்தில் நின்றன.
75 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதாவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. அந்தக்கட்சி 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடியே தொடக்கத்தில் பின் தங்கியிருந்தார். பின்னர் தான் அவர் கூடுதல் வாக்குகள் பெற்று அதிக முன்னிலைக்கு சென்றார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, சுல்தான்பூரில் களத்தில் நின்ற மேனகா காந்தி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பின்தங்கியிருக்கிறார்கள். இது பா.ஜனதா தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் கோவில் கட்டியது, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக பா.ஜனதாவுக்கு பெரும்பாலான தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா கூட்டணியின் சிறப்பான செயல்பாடுகளால் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் பெரும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அந்த கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் அந்த மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்கள். ஆனாலும் இந்த பிரசாரம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலை அந்த மாநிலத்தில் இருப்பதை காண முடிந்தது. இதை இந்தியா கூட்டணி சரியாக பயன்படுத்திக் கொண்டது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பா.ஜனதா கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
உத்தரபிரேதசத்தில் பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பல்வேறு வியூகங்களை அமைத்தார். ராகுல் காந்தியுடன் இணைந்து நடத்திய கூட்டங்கள் இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.
இங்கு இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 62 தொகுதிகளில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 35 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது கடந்த முறையை விட 30 இடங்கள் கூடுதல் ஆகும். 2019 தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 இடங்களே கிடைத்தது.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டது. இதில் 8 இடங்களில் அந்த கட்சி முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலை விட அந்த கட்சி தற்போது 7 இடங்களில் கூடுதல் பெற்று முன்னிலையில் இருக்கிறது. 2019-ல் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
தற்போது ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்தியா கூட்டணி தலைவர்களின் பிரசாரமும் , பா.ஜனதாவுக்கு எதிரான தேர்தல் வியூகமும் அந்த கட்சிக்கு கைக்கொடுத்தது.