தொடர் மழை- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
1 min read
Continued rains- Dams in Nellai and Tenkasi districts continue to rise in water level
10.5.2024
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை வரை 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று சுமார் 4½ அடி உயர்ந்து 81.80 அடியாக இருந்த நிலையில், தொடர் நீர்வரத்து காரணமாக இன்று மேலும் 3½ அடி உயர்ந்து 85.15 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி வரை உயர்ந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 104.26 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.33 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43.25 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் அடித்தது.
மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊத்து எஸ்டேட்டில் 24 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. காக்காச்சி மற்றும் மாஞ்சோலை பகுதிகளிலும் தொடர்ந்து 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. காக்காச்சியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்காசியில் அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. செங்கோட்டை யில் 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் ராமநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 57 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 60 அடியை எட்டியுள்ளது.
குண்டாறு அணை நீர்மட்டம் 21.36 அடியாக உள்ளது. அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 15 அடி நீரே தேவை. கருப்பாநதி அணையில் நீர் இருப்பு 29.86 அடியாக உள்ளது.
இன்று காலை வரை குண்டாறு அணை பகுதியில் 4.8 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.