July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டி- சீமான் அறிவிப்பு

1 min read

Announcement of Dr. Abhinaya Botti- Seeman on behalf of Naam Tamilar Party in Vikravandi

14.5.2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். அன்று வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

ஜூலை10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 65,000 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: \”தமிழகத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழ் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிட உள்ளார். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்\” என்று அதில் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 8.19 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களது விருப்பச் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தில் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.