செந்தில் பாலாஜி சிறை சென்று ஓராண்டாகிறது
1 min read
It has been a year since Senthil Balaji went to jail
14.5.2024
2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க. ஆட்சியில் டிரைவர் -கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வகித்து வந்த போக்குவரத்து துறையில் 81 பேருக்கு வேலை தருவதாக கூறி ரூ.1.62 கோடி பணத்தை பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 2018-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ரூ.1 கோடியே 62 லட்சம் பணம் பெற்ற விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் 2019-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். இதன் பிறகே இந்த வழக்கு வேகம் எடுத்தது.
இதை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில்பாலாஜி கோர்ட்டை நாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதைதொடர்ந்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியிரில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஜூன் 21-ந்தேதி இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் அங்கேயே நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி ஜூலை மாதம் 18-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பிறகு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டாக சிறையிலேயே இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி ஜாமின் மறு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.