விஷ சாராயம் எதிரொலி- சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம்
1 min read
Poisonous Liquor Echo- ID card mandatory to buy sanitizer
21.6.2024
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சாராயம், மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாக கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.