July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்

1 min read

3 new criminal laws of the central government will come into force from today

1.7.2024
நம் நாட்டின் குற்றவியல் நடைமுறையில் பரவலான மாற்றத்தை கொண்டு வரும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இத்துடன் முடிவுக்கு வருகின்றன. புதிய சட்டங்களின்படி, சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்தால் மரண தண்டனை கிடைக்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாமலேயே, ஆன்லைனில் புகார் அளிக்கவும் இந்த சட்டங்கள் வழிவகை செய்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களையே, இத்தனை ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்தோம்.

இவற்றில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் இருந்து வந்தன.
பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்ற பின், குற்றவியல் சட்டங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
பல்வேறு துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், ஆங்கிலேய காலத்து சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன.
‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெற்றன.
இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

மூன்று சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், விசாரணை துவங்கி, 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும்
  • பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை, அவரது பாதுகாவலர் அல்லது உறவினர் முன்னிலையில், பெண் போலீஸ் அதிகாரி பதிவு செய்ய வேண்டும். மேலும், மருத்துவ அறிக்கைகள் ஏழு நாட்களுக்குள் வர வேண்டும்
  • ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாத செயல்கள் போன்றவை, ராஜ துரோகத்துக்கு பதிலாக தேச துரோகமாக வரையறுக்கப்பட்டு உள்ளன. இவை போன்ற குற்றங்களில் தேடுதல் வேட்டைகள், பறிமுதல்களை, ‘வீடியோ’ பதிவு செய்வது கட்டாயமாகும்
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தையை வாங்குவது மற்றும் விற்பது கொடூரமான குற்றமாகும். 18 வயது நிரம்பாத சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்தால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு, புதிய சட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய தண்டனை சட்டத்தில் முன்பிருந்த 511 பிரிவுகள், 358 ஆக குறைக்கப்பட்டுள்ளன
  • திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளிப்பது, சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்வது, கும்பலாக தாக்குவது, நகை பறிப்பு போன்ற குற்றங்களை கையாள, இந்திய தண்டனை சட்டத்தில் விதிகள் இல்லை. பாரதிய நியாய சன்ஹிதாவில் இதற்கான விதிகள் இடம் பெற்றுள்ளன
  • ஒரு குற்ற சம்பவம் குறித்து புகார் அளிக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக இனி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு தகவல் தொடர்பு வசதி வாயிலாக புகாரை அளிக்கலாம். புகாரை எளிதாக, விரைவாக அளிக்கவும், போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுப்பதையும் இது எளிதாக்குகிறது
  • பூஜ்ய எப்.ஐ.ஆர்., என்ற நடைமுறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் வாயிலாக, எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் ஒருவர் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். இது, எங்கள் காவல் வரம்புக்குள் வராது என்று போலீசார் இனி கூற முடியாது
  • கைது நடவடிக்கையின் போது, கைதுக்கு ஆளாகும் நபர், தான் விரும்பும் ஒரு நபருக்கு அதை பற்றிய தகவலை அளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடி ஆதரவையும், உதவியையும் இது உறுதி செய்யும்
  • தவிர, கைது செய்யப்பட்ட விபரங்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மாவட்ட தலைமையகத்தில், பொது பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் முக்கிய தகவல்களை பெற இது வழி செய்யும்
  • வழக்குகள் மற்றும் விசாரணைகளை வலுப்படுத்த, தடயவியல் நிபுணர்கள், கொடூர குற்றங்கள் நடந்த இடங்களுக்கு சென்று சாட்சியங்களை சேகரிப்பது கட்டாயமாகும்
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள், 90 நாட்களுக்குள் தங்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது
  • வழக்கு நடைமுறைகளை விரைவுபடுத்தவும், காகித பயன்பாட்டை குறைத்து, வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தகவல் பரிமாற்றத்தை திறம்படச் செய்வதற்காக, சம்மன்களை இனி மின்னணு தகவல் தொடர்பு முறை வாயிலாக அளிக்க, புதிய சட்டம் இடமளிக்கிறது
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முடிந்தவரை, பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் ஆண் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளிக்கலாம். ஆனால், அங்கு ஒரு பெண் இருப்பது கட்டாயம்
  • எப்.ஐ.ஆர்., போலீஸ் ரிப்போர்ட், குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆவணங்கள், 14 நாட்களுக்குள் இரு தரப்புக்கும் அளிக்கப்பட வேண்டும்
  • நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்
  • பாலினம் பற்றி குறிப்பிடுகையில், மூன்றாம் பாலினத்தவர்களும் இனி சேர்த்துக் கொள்ளப்படுவர்.
    இவை போன்ற முக்கிய அம்சங்கள் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.