அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பெண்கள் பலி
1 min read
2 women died after stepping on a downed power line
14.7.2024
வானூர் அருகே விவசாய நிலத்தில் அருந்து கிடந்த மின்சார கம்பியால் இரு பெண்கள் பலியான சம்பவம் குறித்து வானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த புளிச்சபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சவுக்கு பயிர் சாகுபடி செய்து அதை பாதுகாப்பதற்காக விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளார், இந்த நிலையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக சேகர் விவசாய நிலத்திற்கு மேல் செல்லும் மின்கம்பி அறுந்து இரும்பு வேலி மீது விழுந்துள்ளது,
இந்த நிலையில் இன்று மாலை சேகர் விவசாய நிலத்தின் வழியாக விவசாய வேலைக்கு புளிச்சப்பள்ளம் கிராமம், கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த பொண்ண முத்து மனைவி சத்தியவேணி என்பவரும் அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மனைவி வீரம்மாள் ஆகியோர் சென்றுள்ளனர், அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பி அருந்து விழுந்தது தெரியாமல் அங்கிருந்த கம்பி வெளியை வீரம்மாள், சத்தியவேணி ஆகிய இருவரும் தொட்டுள்ளனர், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்,
இதுகுறித்து தகவல் அறிந்த வானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார கம்பி அருந்து கிடந்தது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டால் மின்சார துறையினர் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதில்லை எனவும், தொடர்ந்து அலட்சிய போக்காக செயல்பட்டு வருவதாகவும் மின்துறையினர் மீது குற்றச்சாட்டு வைத்தனர், மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.