குமரி மாவட்டத்தில் இன்றும் மழை: பாலமோரில் 28.2 மில்லி மீட்டர் பதிவு
1 min read
Rain continues in Kumari district today: Balamore records 28.2 mm
15.7.2024
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து மழை பெய்த தால் அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.
கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, சுருளோடு, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது.
மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
பாலமோரில் அதிகபட்சமாக 28.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது.
அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.76 அடியாக இருந்தது.
அணைக்கு 475 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 481 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.22 அடியாக உள்ளது. அணைக்கு 401 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.35 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 47.82 அடியாகவும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.20 அடியாக உள்ளது.