மது ஒழிப்பை வலியுறுத்தி முட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டல் ஊழியர்
1 min read
A hotel employee who went on a strike demanding the abolition of alcohol
16.7.2024
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காமராஜர் சிலை அமைந்துள்ளது. இன்று காலை சிலை முன்பு திடீரென கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் கையில் மதுவை ஒழிப்போம் என்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு பதாகை ஒன்றை ஏந்தி முட்டி போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்திய போது மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் நெல்லை மாவட்டம் குறிச்சிக்குளம் பகுதியை சேர்ந்த யோவான் என்பதும், இவர் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் பணி புரிவதும் தெரியவந்துள்ளது.
மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.