கேரளாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
1 min read
AIADMK former minister in Kerala M.R. Vijayabaskar arrested
16.7.2024
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாகியிருந்த நிலையில், கேரளத்தில் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் சோ்ந்து மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது நிலத்தை மோசடி செய்து எழுதி வாங்கிவிட்டதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் மீது பிரகாஷ் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்பிணை கேட்டு கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கா் தனது வழக்குரைஞா்கள் மூலம் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு மீதான தீா்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள இடைக்கால பிணை கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஒரு மனு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம், தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி குற்றம்சாட்டப்பட்டவருக்கு இடைக்கால பிணை வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தாா்.
இதையடுத்து, கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக கரூர் அழைத்து வரப்பட்டார். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.