உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
1 min read
Increase in domestic air passenger numbers
16.7.2024
உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணித்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 760.93 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை 4.28 சதவீதம் அதிகரித்துள்ளது. மாதவாரியாக கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 5.76 சதவீதம் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு 15.2 கோடி பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணித்திருந்த நிலையில், 2022-ல் 12.32 கோடியாக இருந்தது. ஆண்டுவாரியாக இது 23.36 சதவீதம் வளர்ச்சியாகும்.
விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விமான இருக்கைகளை முன்பதிவு செய்து பின்னர் பயணிகளால் ரத்து செய்யப்பட்ட விகிதம் மே 2024-ல் 1.7 சதவீதம் ஆக இருந்தது.
இத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதன் காரணங்களையும் குறிப்பிடுகின்றன. அதன்படி காலநிலை மாற்றம் காரணமாக 39.6 சதவீதம் பேரும், விமான செயல்பாடுகள் காரணமாக 23 சதவீதம் பயணிகளும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 16.4 சதவீதம் பயணிகளும், இன்ன பிற காரணங்களுக்காக 19.5 சதவீதம் பயணிகளும் முன்பதிவு செய்த விமானங்களை ரத்து செய்துள்ளனர்.
எனினும் விமான போக்குவரத்துத் துறையில் பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது, விமான பயணத் தேவை அதிகரிப்பையும், நேர்மறையான நம்பிக்கையையும் குறிக்கிறது.
இந்த வளர்ச்சியானது, விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், விமான போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் கிடைத்த பலன் என விமான போக்குவரத்துத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.