சமயபுரத்துக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 5 பேர் வேன் மோதி பலி
1 min read
5 devotees who were on a padayatra to Samayapuram were killed in a van collision
17.7.2024
சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லோடு டெம்போ மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். ஆடி மாதம் பிறந்திருக்கும் நிலையில் சமயபுரம் கோயிலுக்கு அதிகம் பேர் வந்து செல்வர்.
அந்தகவகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு குழு மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கன்னுக்குடிபட்டியை சேர்ந்த முத்துச்சாமி, மீனா, ராணி, சங்கீதா, லட்சுமி மோகனாம்பாள் உள்ளிட்டோர் சமயபுரத்துக்கு சென்று வழிபட இருந்தனர்.
இவர்கள் இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு டெம்போ இவர்கள் மீது மோதியதால் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் மீனா, ராணி, மோகனாம்பாள், முத்துசாமி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சங்கீதா, லட்சுமி ஆகியோர் படுகாயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக அதிகரித்தது.
இந்த லோடு டெம்போ கரூரில் இருந்து தஞ்சை வந்து அரிசி மூட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் கரூருக்கு திரும்பும் போது இவ்விபத்து ஏற்பட்டிருக்கிறது.
லோடு டெம்போவை வளம்பக்குடியைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்ததாகவும், அதிகாலை நேரத்தில் அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ பக்தர்கள் மீது மோதியிருக்கிறது.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று காலை சுமார் 7 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த முத்துசாமி, ராணி, மோகனாம்பாள் மற்றும் மீனாஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இவ்விபத்தில் தனலட்சுமிஎன்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.