எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 7 மணி நேரம் விசாரணை
1 min read
CPCID police interrogated MR Vijayabaskar for 7 hours
17.7.2024
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்தார்.
இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த இன்னொரு புகாரில் தொழிலதிபர் பிரகாஷ் தனது மகள் சோபனாவுக்கு தான செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை, அசல் ஆவணம் தொலைந்து விட்டதாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் போலி சான்றிதழ் பெற்று பத்திரப் பதிவு மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து கரூர் நகர காவல் நிலைய போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு தள்ளுபடி ஆன நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் மற்றும் ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களை தேடினர்.
இந்த நிலையில் 35 நாட்களுக்கு பின்னர் நேற்று அதிகாலை கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரையும் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் அழைத்து வந்தனர்.
பின்னர் சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரையும் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய ஜெயிலிலும், பிரவீன் குளித்தலை கிளை ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக போலி சான்றிதழ் கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் நேற்று நள்ளிரவு சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவரிடம் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எம்.ஆர். விஜயபாஸ்கரை தொடர்ந்து அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அ.தி.மு.க.வி.னரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.