துவரம் பருப்பு விலை கிடுகிடு உயர்வு
1 min read
Duvaram dal prices rise sharply
17.7.2024
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம்பருப்பு விற்பனைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் வெளிச்சந்தைகளிலும் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இது சாமானிய மக்களை சிரமத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகத்தில் மளிகைப்பொருட்களின் விலை செப்டம்பர்-டிசம்பர் மாதங்களில் அதிகரித்து காணப்படும். பின்னர் ஜனவரி மாதத்தில் விலை குறைந்து ஏப்ரல்-மே மாதம் வரை விலை சீராக இருக்கும். ஆனால் நடப்பாண்டில் மளிகைப்பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் துவரம்பருப்பு விலை கிடுகிடுவென அதிகரித்தது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ துவரம்பருப்பு விலை ரூ.140 ஆக இருந்தது. இது கடந்த மாதம் 160 ஆக அதிகரித்தது. தொடர்ந்து ஒரு கிலோ துவரம்பருப்பு தற்போது ரூ.195 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர கடந்த மாதம் 600 ரூபாய்க்கு விற்ற குருமிளகு தற்போது ரூ.780-க்கும், சுண்டல் ரூ.70-லிருந்து ரூ.110-க்கும், முந்திரி ரூ.550-லிருந்து ரூ.850-க்கும், ஏலக்காய் ரூ.1800-லிருந்து ரூ.3000-க்கும், பட்டாணி ரூ.80-லிருந்து ரூ.130-க்கும் விற்பனையாகி வருகிறது.
கோவையின் தானிய மார்க்கெட் சந்தைகளில் பெரும்பாலான மளிகை பொருட்களின் விலை மற்றும் காய்கறி விலை ஆகியவை உயர்ந்து காணப்படுவது பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மராட்டியம், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து துவரம்பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. மழை காரணமாக விளைச்சல் குறைவு ஏற்பட்டு வரத்தும் குறைந்து காணப்படுவதால் உணவு தானியங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் முந்திரி, ஏலக்காய், பூண்டு, பட்டாணி என பெரும்பாலான பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. வருகிற நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தானியங்களின் விலை குறைய வாய்ப்பு இல்லையென தெரிவித்து உள்ளார்.