டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
1 min read
Governor RN Ravi meets Union Home Minister Amit Shah in Delhi
17.7.2024
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளா ர். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆலோசித்ததாக கூறப்பட்டது.
இன்று காலை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை, கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். இந்த நிலையில் தற்போது கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்து அவருடன் விவாதித்ததாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.