ராமேஸ்வரம் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலசாபிஷேகம்
1 min read
Kalasabhishekam of Vijayendra Saraswati Swami at Rameswaram Temple
17.7.2024
உலக நன்மை வேண்டி காஞ்சி சங்கர மடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் கருவறைக்குள் சென்று கலசாபிஷேகம் செய்து வழிபட்டார். ஆன்மிக வளர்ச்சிக்கு சான்றாக ராமேஸ்வரம் திகழ்ந்து வருகிறது என புகழாரம் சூட்டினார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய இன்று வந்த காஞ்சி சங்கர மடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஓராண்டாக பூஜை செய்த கங்கை கலச நீரை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் சென்றார். சன்னதிக்குள் இருந்த சிவலிங்கத்திற்கு கலசாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்து 30 நிமிடம் வழிபட்டார்.
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலசாபிஷேகம் செய்யும் போது கருவறை முகப்பு பகுதி திரையிடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது கருவறைக்குள் மகாராஷ்டிரா குருக்கள் இருவர் மட்டும் உதவி செய்தனர்.
கருவறைக்குள் பூஜை செய்த பின் வெளியே வந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோயில் அலுவலர்களுக்கும் பணியில் இருந்த குருக்களுக்கு நன்றி தெரிவித்து தனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறினார்.
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், உலக நன்மை வேண்டி கடந்த ஓராண்டுக்கு முன் இதே நாள் ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து மண் எடுத்துச் சென்று கங்கையில் கரைத்து பூஜை செய்த பின் கங்கையிலிருந்து நீர் எடுத்துவரப்பட்டு கடந்த ஓராண்டாக பூஜித்த கலச நீரை கொண்டு ராமநாத சுவாமிக்கு பூஜை செய்ததாகவும், ராமேஸ்வரத்தில் காஞ்சி சங்கர மடம் சார்பில் கல்வி வளர்ச்சிப் பணிகளை விரிவாக செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். ராமேஸ்வரம் ஆன்மிக வளர்ச்சிக்கு சான்றாக திகழ்வதாகவும் ஆன்மிகம் இன்னும் வளர பல்வேறு நடவடிக்கைகள் தேவை அதற்கு; முயற்சி தேவை என்றார். 2 டிஎஸ்பி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் கோயிலுக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.