13 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது
1 min read
An oil tanker carrying 13 Indian sailors capsized
18.7.2024
13 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதில் 13 இந்திய மாலுமிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த 3 மாலுமிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர். இந்த கப்பல் ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கடலில் மூழ்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி மாயமான மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.