“ஆருத்ரா நிறுவன விவகாரத்துக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளது”- சசிகாந்த் செந்தில் எம்.பி. பேட்டி
1 min read
“Arudra Corporation issue linked to Armstrong’s murder” – Sasikanth Senthil MP Interview
18.9.2024
“ஆருத்ரா நிறுவனம் முறைகேடு விஷயத்துக்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் உள்ளது. இது பலருக்கு தெரியும். போலீஸும் இது தொடர்பாக விசாரித்து வருகிறது” என காங்கிரஸ் எம்.பி.யான சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
திருச்சி தூய வளனார் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் சிறப்புரையாற்ற இன்று திருச்சி வந்திருந்தார், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி-யும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் விவாதம், ஆலோசனை போன்ற எவ்வித நிகழ்வுகளும் இல்லாமல் மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை திருத்தி அமல்படுத்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இதில் 90 சதவீதம் பழைய சட்டங்களாக இருந்தாலும், முக்கியமான பல விஷயங்களை மாற்றி உள்ளனர்.
இந்திய நியாய முறைப்படி மாற்றி உள்ளதாக பாஜகவினர் கூறியுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விலக்கிவிட்டு மனுஸ்ருமிதி சட்டத்தை கொண்டு வரும் முதல் படியாக இதை பார்க்கிறேன் இதை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம். இதை நாடாளுமன்றத்திலும் எதிர்ப்போம்.
ஆருத்ரா நிறுவனம் முறைகேடு விஷயத்துக்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் உள்ளது. இது பலருக்கு தெரியும். போலீஸும் இது தொடர்பாக விசாரித்து வருகிறது. இதில் பல பாஜக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தை எடுத்தால் பல குற்ற நடவடிக்கைகள் வெளியே வரும். இதைக் கூறும்போது தான் பாஜக தலைவர் அண்ணாமலை அளவுக்கு மீறி தனி மனித தாக்குதலில் ஈடுபடுகிறார். எனவே, அதிலிருந்தே இதில் ஏதோ மர்மம் உள்ளது என்பது புலப்படுகிறது” என்றார்.