அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு ரூ.372 கோடிக்கு ஏலம்
1 min read
Dinosaur skeleton auctioned in America for Rs.372 crores
18/7/2024
அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு ரூ.372 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது. மேற்கு அமெரிக்க மாகாணமான கொலராடோவில் மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை ஜேசன் கூப்பர் என்பவர் கண்டுபிடித்தார். இந்த டைனோசருக்கு அபெக்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஸ்டெகோசொரஸ் டைனோசர் 11 அடி உயரமும், மூக்கிலிருந்து வால் வரை 27 அடி நீளமும் கொண்டது. இந்த டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.
இதில் 7 பேர் பங்கேற்று ஏலம் கேட்டனர். இதில் டைனோசரின் எலும்புக்கூடு 44.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ( இந்திய மதிப்பில் ரூ. 372 கோடி) ஏலம் போனது. இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு ஸ்டான் என்று அழைக்கப்படும் டி ரெக்ஸ் என்ற டைனோசரின் எலும்புக்கூடு ரூ.265 கோடிக்கு ஏலம் போயிருந்தது. அதை அபெக்ஸ் முறியடித்தது.
இதுகுறித்து சோதேபிஸ் ஏல நிறுவனம் கூறும்போது, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டவற்றில் மிகவும் மதிப்புமிக்க புதைபடிவமாக அபெக்ஸ் உள்ளது. இந்த புதைபடிவம் அதன் விற்பனைக்கு முந்தைய மதிப்பீட்டை விட 11 மடங்கு அதிகமாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்டீகோசொரஸ் வகை டைனோசரின் புதைபடிவம் இதுவாகும் என்று தெரிவித்தது.