நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
NEET results to be published center wise – Supreme Court orders
18/7/2024
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது.
தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு புகார்கள் தேர்வு நடந்தபோதே எழுந்தன. அது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்த நிலையில், ஜூன் 4ம்தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகி இருந்தன.
குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவாக 67 மாணவ-மாணவிகள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். இதில் அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் அடங்குவர். இதைப்போல தேர்வின் போது பல்வேறு வகையில் ஏற்பட்ட நேர இழப்புக்காக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் அம்பலமானதால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் இந்த மோசடிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அதே சமயம் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களும் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த 50க்கு மேற்பட்ட மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வை ரத்து செய்வது அறிவுப்பூர்வமாக இருக்காது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
இவ்வாறு நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள 30-க்கு மேற்பட்ட வழக்குகள் கடந்த 8-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது நீட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தரப்பிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தினால் போதும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘முழு தேர்வுமே தனது புனிதத்தை இழந்துவிட்டது என்றால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் அடையாளங்களை மறைத்து நாளை மாலை 5 மணிக்குள் நகரங்கள், மையங்கள் வாரியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.