ரேசன் கடையை சூறையாடி அரிசி மூட்டையை தூக்கி சென்ற யானைகள் கூட்டம்
1 min read
A herd of elephants ransacked the ration shop and carried off the sacks of rice
20.7.2024
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சமவெளி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் வனத்தையொட்டிய அடிவாரப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினாலும் அவை மீண்டும் திரும்பி வந்துவிடுகிறது.
இந்த நிலையில் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு வந்தன.
பின்னர் அவை அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. தொடர்ந்து பக்கத்திலுள்ள மளிகை கடையையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது.
இதனையடுத்து சுமார் ஒரு கி.மீ.. தொலைவுக்கு நடந்துசென்ற காட்டு யானைகள் கொலகம்பை பகுதியில் உள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. பின்னர் அங்கு இருந்த ஒரு மூட்டை அரிசியையும் தூக்கிக்கொண்டு சென்றது. தொடர்ந்து பஜார் பகுதியில் 2 மளிகை கடைகளை சேதப்படுத்தி காய்கறிகளை ருசித்தன.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த யானைகள் இன்று காலை கம்மந்து வனப்பகுதியில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.
தொடர்ந்து வனச்சரகர்கள் ரவீந்திரநாத் (குன்னூர்), சீனிவாசன் (குந்தா) ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.
காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் பீதி அடைந்ததுடன் தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.