அடவிநயினார் கோவில் அணை தண்ணீர் திறப்பு
1 min read
Adavinayanar temple dam water release
20.7.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களுக்கு உட்பட்ட அடவிநயினார் கோவில் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அமிர்தலிங்கம் தண்ணீர் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாவின் ஆணையின்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களுக்கு உட்பட்ட அடவிநயினார் கோவில் நதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அமிர்தலிங்கம் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.
அடவிநயினார் பாசன திட்டத்தின் கீழுள்ள மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம் கால், இலத்தூர்கால், நயினாகரம் கால், கிளாங்காடு கால், புங்கன்கால் மற்றும் சாம்பவர் வடகரைகால் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசன வசதி பெறும் பாசன நிலங்களுக்கு பசலி கார் பருவ சாகுபடிக்கு அடவிநயினார் கோவில் நீர்த் தேக்கத்திலிருந்து 19.07.2024 முதல் 31-10-2024 வரை 105 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடி வினாடி வீதம் மொத்தம் 268.43 மி.க.அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி, குத்துக்கல்வலசை, இலத்தூர், அச்சன்புதூர், நெடுவயல், கொடிக்குறிச்சி, நயினாகரம், கிளாங்காடு, ஆய்க்குடி, கம்பளி, சாம்பவர் வடகரை ஆகிய கிராமங்கள் பயன் பெறும்.
மேலும், அடவிநயினார் கோவில் பாசனத் திட்டத்தின் கீழுள்ள மேட்டுக்கால கால்வாய், பழைய நேரடி ஆயக்கட்டு, புதிய நேரடி ஆயக்கட்டு, கரிசல்கால்வாய், பண்பொழி கால்வாய், வல்லாக்குளம் கால்வாய், இலத்தூர் கால்வாய், நயினாகரம் கால்வாய், கிளாங்காடு கால்வாய், கம்பிளி கால்வாய், புங்கன் கால்வாய், சாம்பவர் வடகரை கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 2147.47 ஏக்கர் நேரடிப் பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு கார் பருவ சாகுபடிக்கு அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
எதிர் வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர் பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லை என்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும். எனவும், நீரை சிக்கனமாக பயனபடுத்தவும், நீர்விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறும் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)அமிர்தலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) அண்ணாத்துரை, உதவி செயற் பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) சரவணக்குமார், செங்கோட்டை வட்டாட்சியர் சத்திய வள்ளி, வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக்தாவுது மற்றும் அடவி நயினார் நீர்பாசனத்தை சார்ந்த விவசாய பிரதிநிதிகள், அரசு அலுவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.