July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் மாற்றம்

1 min read

Change of trains from southern districts to Chennai

21/7/2024
தென்மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். பண்டிகை காலக்கட்டங்களின்போது முன்பதிவு தொடங்கியதும் 2 நிமிடங்களில் அனைத்து இருக்கைகளும் ரெயில்களில் நிரம்பிவிடும்.

தினந்தோறும் பணி நிமித்தமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ரெயில்களில் அதிகமாகவே இருக்கும். மிகவும் பாதுகாப்பான மற்றும் சவுகரியமான பயணமாக ரெயில் பயணம் இருப்பதால் மக்கள் அதனையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் சென்னை ரெயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்துதல் பணி உள்ளிட்டவை நாளை முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை தாம்பரம் செல்லும் பல்வேறு ரெயில்கள் பகுதி தூரமாகவும், சில ரெயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, மாற்று வழியில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில் (வண்டி எண்கள்.20665, 20666) நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலானது தாம்பரம்-எழும்பூர் இடையே புறநகர் ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். அந்த ரெயில் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக எழும்பூரை சென்றடையும்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் மாதம் 14,15,16-ந்தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே செல்லும். ஆகஸ்ட் 17-ந்தேதி செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம் என மாற்று வழியில் எழும்பூர் செல்லும்.

அதேநேரம் இரவு நேரங்களில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களான நெல்லை, பொதிகை, அனந்தபுரி, பாண்டியன், முத்துநகர், சிலம்பு உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் சிக்னல் பணிகள் முடிவடையும் வரை 20 முதல் 30 நிமிடங்கள் வரை புறநகர் பகுதியில் தாமதமாக இயக்கப்படும்.

முதல் கட்டமாக இந்த ரெயில் இயக்க மாற்றங்களானது நாளை(திங்கட்கிழமை) தொடங்கி இந்த மாதம் 31-ந்தேதி வரை பொருந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் இரவு 11 மணிக்கு புறப்படும் வண்டி எண்.20691 தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு ரெயில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3.50 மணிக்கு புறப்படும் வண்டி எண்.20692 நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரெயில் நாளை(திங்கட்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை முழுமையாக ரத்தாகிறது.

இதேபோல் தினமும் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும் செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.20684) ரெயிலானது இன்று தொடங்கி, 24,26,27,29,31-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும். இந்த ரெயிலானது விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.20683) ரெயிலானது வருகிற 24,25,28,30-ந்தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் ஆகஸ்ட் 13-ந்தேதி வரை ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப் படும் தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்.22657)விரைவு ரெயில் வருகிற 24,28,29 மற்றும் 31-ந்தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-தாம்பரம்(வண்டி எண்.22658) ரெயிலானது இன்று, நாளை மற்றும் 25,29,30-ந்தேதிகளில் சென்னை தாம்பரத்திற்கு பதில் எழும்பூரில் சென்று நிற்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.