மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்: ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை
1 min read
New twist in Madurai school student kidnapping case: IAS officer’s wife commits suicide
21.7.2024
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மைதிலி ராஜலட்சுமி (வயது 40). இவர்களுடைய மகன், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.
கடந்த 10 ஆம் தேதி காலை ஆட்டோவில் பள்ளிக்கு புறப்பட்டான். ஆட்டோவை டிரைவர் பால்பாண்டி ஓட்டிச்சென்றார். திடீரென நடுவழியில் அந்த ஆட்டோவை ஒரு கும்பல் வழிமறித்தது. ஆட்டோவுடன் மாணவன் மற்றும் டிரைவர் பால்பாண்டி ஆகியோரை பயங்கர ஆயுதங்களை காண்பித்து கடத்திச் சென்றது.
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து, மாணவனை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி தர வேண்டும் என்று மிரட்டினர்.
இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசில் மைதிலி ராஜலட்சுமி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான தனிப்படையினர் உடனடி நடவடிக்கை எடுத்து, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடத்தல்காரர்களை விரட்டிச் சென்று, 3 மணி நேரத்தில் அந்த சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை பத்திரமாக மீட்டனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை கடத்தியது முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர் மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் தேனி மாவட்டம் போடியில் பதுங்கி இருந்தார். அங்கு சென்ற தனிப்படை போலீசார், செந்தில்குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில்குமார், போலீசாக பணியாற்றி வந்தார். சில குற்றச்சாட்டுகளால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், அவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
மேற்கண்ட சிறுவன் பள்ளிக்கூடத்துக்கு ஆட்டோவில் சென்று வருவதை நோட்டமிட்டும், அவனது குடும்ப பின்னணியை அறிந்தும் பணம் பறிக்கும் நோக்கில் செந்தில்குமார் இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த தென்காசியை சேர்ந்த வீரமணி மற்றும் காளிராஜ், நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் ஆகியோரையும் போலீசார் கடந்த 12-ம் தேதி இரவு கைது செய்தனர்.
இந்தநிலையில், மதுரையில் சிறுவனை கடத்தி ரூ. 2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டு வந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனைவி சூர்யா குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்ட கலெக்டர் இல்லத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அப்பெண்ணின் தாயார் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
விளாத்திக்குளம் சூர்யா சில ஆண்டுகளுக்கு முன் மைதிலி, அவரது கணவர் ராஜ்குமாரிடம் வட்டிக்கு ரூ.2 கோடி கடன் வாங்கினார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் திருப்பி தராமல், கடனுக்கு ஈடாக மதுரையில் உள்ள சில சொத்துகளை மைதிலிக்கு சூர்யா எழுதிக் கொடுத்தார்.
பணமும், சொத்தும் இல்லாத நிலையில் மைதிலியின் மகனை கடத்தி ரூ.2 கோடி பறிக்க சூர்யா திட்டமிட்டார். இதற்காக துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில் உள்ளிட்ட கூலிப்படையினரை அணுகினார். அதன்பின்புதான் மாணவன் கடத்தப்பட்டு உள்ளான். இப்போது சூர்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.