பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை
1 min read
Theft of 10 pounds of jewelery by breaking the door of a locked house
21.7.2024
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கோவில்குளம் சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (வயது 34). இவர்களுக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாரிமுத்து வேலைக்கு சென்றுவிட்டார். பார்வதி வீட்டை பூட்டி விட்டு தனது மகனை அழைத்துக்கொண்டு வயல் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி வீட்டுக்குள் ஓடிச்சென்று பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது.
அதில் இருந்த துணி மணிகள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர் யாரோ ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து நகையை திருடிச்சென்றதை அறிந்த பார்வதி, உடனடியாக அம்பை போலீசில் தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லாததால் அம்பை- ஆலங்குளம் சாலையில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.