வங்கதேசம்: ஓட்டலில் 24 பேர் எரித்துக் கொலை
1 min read
Bangladesh: 24 people were burnt to death in a hotel
6.8.2024
வங்கதேசத்தில் ஆவாமி லீக் கட்சி எம்.பி.,க்கு சொந்தமான ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததில் 24 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வங்கதேசத்தில் ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ஆட்சியை ராணுவம் கையில் எடுத்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அவாமி லீக் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களை சூறையாடி வருகின்றனர். நேற்று பிரதமர் இல்லத்திற்குள் புகுந்தவர்கள், அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், ஜெசோர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அதில் 24 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஓட்டல் அவாமி லீக் கட்சி எம்.பி.,யான ஷாகின் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
டாகாவில் உள்ள இஸ்கான் கோயிலும் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டாக்காவில் உள்ள இந்திரா காந்தி கலாசார மையத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அதனை சூறையாடி, அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.