தஞ்சை:பெருமாள் சிலையை ரூ.2 கோடிக்கு விலை பேசிய கும்பல் கைது
1 min read
Thanjavur: Gang arrested for selling Perumal idol for Rs.2 crore
10.8.2024
தஞ்சையில், ரூ.2 கோடி ரூபாய்க்கு பழங்கால பெருமாள் சிலையை விலை பேசி விற்க முயற்சித்த கும்பல் சிக்கியது.
தஞ்சாவூர், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தி செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டியில், ஒரு கார் ஒன்றும், இரண்டு பைக்கும் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டு இருந்தது. போலீசார் சோதனை செய்தனர்.
அதில் இருந்த சென்னை, அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை ராஜேந்திரன்,52,. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அலமங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார்,36, திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ்,28, ஜெய்சங்கர், 58, கடலுார் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த விஜய், 28, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை கைப்பற்றினர்.
தொடர்ந்து விசாரணையில், இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலை கிடைத்துள்ளது.
வருவாய் துறையினரிடம் தகவல் அளிக்காமல், மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார். தினேஷ் அவரது தந்தைக்கு பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்து இருந்த சிலையை கண்டெடுத்தார்.
அவரும், வருவாய்துறையினரிடம் தெரிவிக்காமல், இரண்டு கோடி ரூபாய் விற்பனைக்கு செய்ய வேண்டும் என முயன்றுள்ளார். நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். நண்பர்களான ராஜ்குமார், ஜெயசங்கர், விஜய் ஆகியோருடன், திருவிடைமருதுாரை சேர்ந்த ஹாரிஸ்,26, கண்டமங்கலம் அஜித்குமார், 26. ஆகியோரை பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு சிலையை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலையானது 15 முதல் 16ம் நுாற்றாண்டு சோழர்கள் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.