மாலத்தீவு அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
1 min read
External Affairs Minister Jaishankar meets President of Maldives
11.8.2024
இந்தியாவுக்கு அருகே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு. இந்நாட்டில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், சீனாவுக்கு ஆதரவான, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட முகமது முய்சு வெற்றிபெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின்னர், முய்சு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய படை வீரர்கள் 88 பேரை திரும்பப்பெரும்படி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் திரும்பப்பெறப்பட்டனர். சுற்றுலா விவகாரத்திலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.
இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் பெரும் பேசுபொருளான நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்த்தனர். இதனால், அந்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், இந்தியாவுக்கு எதிரான மோதல்போக்கை மாலத்தீவு குறைத்துக்கொண்டது.
இந்நிலையில், 3 நாள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவு சென்றுள்ளார். அவர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது, உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், மாலத்தீவு அதிபர் முய்சுவும் ஆலோசனை நடத்தினர்.