வங்காள தேசத்தில் இந்து பிரதிநிதிகளை சந்தித்த முகமது யூனுஸ்
1 min read
Muhammad Yunus met Hindu representatives in Bengal
12.8.2024
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் இந்து மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது தற்போது நடைபெறும் வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவந்து, இந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இடைக்கால அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது.
வங்காளதேசத்தில் உள்ள இந்து மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 5 ஆம் தேதி ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்நாட்டில் அமைந்துள்ள இடைக்கால அரசு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “சிறுபான்மை மதங்களுக்கு எதிராக சில பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பது மிகவும் கவலையடையச் செய்கிறது,” என குறிப்பிப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.