July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்திற்கு வந்த அயலக தமிழர்வாழ் மாணவர்கள்

1 min read

Students from neighboring Tamils ​​who came to Courtalam

12.8.2024
தென்காசி மாவட்டம் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, வருவாய் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த அயலக தமிழர்வாழ் மாணவ மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் , ஆகியோர் முன்னிலையில் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர் களின் குழந்தைகளுக்காக “வேர்களைத்தேடி” என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தினை அறிவித்து, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்கள்.

அதனடிப்படையில் முதற்கட்டமாக கடந்த 03.01.2024 அன்று இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 57 இளைஞர்கள் தேர்வாகி சென்னை, தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி. திருநெல்வேலி. மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடக்கலை. சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்வார்கள். இத்துடன் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் கலந்துரையாடல்களும் பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டபயணமாக, இன்று தென்ஆப்ரிக்காவில் இருந்து 14 இளைஞர்கள், உகாண்டாவில் இருந்து 3 இளைஞர்கள். குவாடலூப்வில் இருந்து 2 இளைஞர்கள், மார்டினிக்வில் இருந்து 3 இளைஞர்கள், பிஜீவில் இருந்து 12 இளைஞர்கள், இந்தோனேஷியாவில் இருந்து 9 இளைஞர்கள், மொரிஷியஸில் இருந்து 13 இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 இளைஞர்கள்.மாலத்தீவில் இருந்து 1 இளைஞர். கனடாவில் இருந்து 9 இளைஞர்கள். மியான்மரில் இருந்து 14 இளைஞர்கள், மலேசியாவில் இருந்து 4 இளைஞர்கள், இலங்கையில் இருந்து 9 இளைஞர்கள், பிரான்ஸில் இருந்து 3 இளைஞர்கள். மற்றும் ஜெர்மனியில் இருந்து 1 இளைஞர் என 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத்தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு வேர்களைத்தேடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பயணம் கடந்த 01.08.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் இருந்து துவக்கி வைத்தார்கள்.

மேலும் இப்பயணமானது 01.08.2024 அன்று சென்னையில் துவக்கி செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி. தென்காசி, மதுரை, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய, இடங்களுக்கு பயணித்து சென்னைக்கு வரும் 14.08.2024 அன்று சென்றடைவார்கள். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

அதன் ஒருபகுதியாக வேர்களைத்தேடி திட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் இன்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்து, குற்றாலம் ஐந்தருவி இசக்கி தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு குற்றால அருவி, பழையகுற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். சட்ட மன்ற உறுப்பினர்களோடு கலந்துரையாடினார்கள். மேலும், சித்த மருத்துவம் மற்றும் வர்மக்கலை பற்றிய பயிற்சி பட்டறை வகுப்புகளும் நடத்தப்பட்டது.

இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை கற்றுணர்வார்கள். இப்பயணத்தின் கடைசி நாளான 15.08.2024 அன்று சென்னையில் உள்ள பெரியார் திடலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) லாவண்யா. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், அயலக தமிழர்நலன் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர்கள் புகழேந்தி, அசோக் குமார், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர்(தென்காசி) வெங்கடேஷ், குடிமைபொருள் பறக்கும்படை தனி வட்டாட்சியர்(தென்காசி) அரவிந்த்வருவாய் வட்டாட்சியர் (தென்காசி) .மணிகண்டன். உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அயலக தமிழர் வாழ் மாணவ /மாணவியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.