கூட்டுறவு வங்கி தீ விபத்தில் மேலாளர் பலி: தற்கொலையா?
1 min read
Co-operative bank fire manager killed: Suicide due to petrol, matchstick?
13.8.2024
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள புதுக்குடி சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன் (வயது 52) இந்த வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
இவருக்கு உதவியாக தற்கால பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இந்த வங்கியுடன் இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ஒரு பெண் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் இ-சேவை மையத்தில் உள்ள பெண், ஸ்ரீதரனின் உதவியாளரும் மதியம் உணவுக்கு வெளியே சென்று உள்ளனர். ஸ்ரீதரன் மட்டும் வங்கியில் தனியாக இருந்துயுள்ளார்.
அந்நேரத்தில் திடீரென வங்கியின் உள் வெடி சத்தம் போல் பயங்கர சத்தம் கேட்டது. அத்துடன் வங்கி தீப்பிடித்து எரிந்தது. மளமளவென தீ பரவி வங்கி முழுவதும் தீ பரவியது. அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் தீ முழுமையாக பரவி புகை மூட்டமாக மாறியது. அருகில் உள்ளவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர்.
உள்ளே சென்றவர்கள் ஸ்ரீதரனை மீட்க முயன்றனர். அதற்குள் மூச்சுதிணறல் ஏற்பட்டு ஸ்ரீதரன் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் கம்ப்யூட்டர் பேட்டரி வெடித்து வங்கியில் தீப்பிடித்ததாக கூறப்பட்டது.
பின்னர் போலீசார் விசாரணையின்போது வங்கியில் பெட்ரோல் மற்றும் தீப்பட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதரன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.