“2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு” – சுதந்திர தின உரையில் பிரதமர் பேச்சு
1 min read
“India a Superpower by 2047” – Prime Minister’s Speech in Independence Day Address
15.8.2024
நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11-வது முறையாக பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
“சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களை போல நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள்தான் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காகப் பலர் உழைத்து வருகின்றனர்.
வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு வருத்தம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். இயற்கை பேரிடர்களால் உறவை இழந்தவர்களுக்கு தேச மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள்.
இந்தியாவை வல்லரசாக்கும் கனவை 2047க்குள் நிறைவேற்ற வேண்டும். இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்ந்து தீவிரமாக உழைத்தால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும். உலக பொருளாதாரத்தில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். “
இவ்வாறு அவர் பேசினார்.