July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

திசையன்விளையில் கோவில் விழா தகராறில் அண்ணன்-தம்பி குத்திக்கொலை

1 min read

Brother-brother stabbed to death in temple festival dispute at Vektianvilai

17.8.2024
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ்வரன்(வயது 41), மதியழகன் (39), மதிராஜா (40). இவர்கள் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் மதியழகன், மதிராஜா ஆகியோருக்கு தலா 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று கக்கன் நகர் அருகே ஓடைக்கரையில் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் முருகன் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். நேற்று நள்ளிரவில் கோவிலில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சாமிக்கு பூஜை நடைபெற்றதால் கரகாட்ட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் முருகன் குடும்பத்தினருக்கும், கக்கன் நகரை சேர்ந்த முருகேஷ்வரியின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் முருகேஷ்வரியின் மகன்கள் உள்பட சிலர் சேர்ந்து முருகனின் மகன்களான மதியழகன், மதிராஜா ஆகியோரை ஆடுகளை பலியிடுவதற்காக கொண்டு வந்திருந்த கத்தியால் சரமாரி குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். மேலும் இதனை தடுக்க வந்த மகேஷ்வரனுக்கும் கத்தி குத்து விழுந்தது.
பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சுந்தரவதனம் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகேஷ்வரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட 2 பேர் உடலும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தடயவியல் நிபுணர் ஆனந்தி சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரித்தார். கோவில் கொடைவிழாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதுகுறித்த விபரம் வருமாறு:-
முருகன் குடும்பத்தினர் வசிக்கும் அதே தெருவில் முருகேஷ்வரியின் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். முருகேஷ்வரியின் மகன்களான வருண்குமார்(27), ராஜ்குமார்(28), விபின்(27) ஆகியோரும் அந்த தெருவிலேயே வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேருக்கும் மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவில் கோவில் கொடைவிழாவையொட்டி 3 பேரும் போதையில் அங்கு வந்துள்ளனர்.

அப்போது கரகாட்ட நிகழ்ச்சியின்போது முருகனின் 3 மகன்களுக்கும், முருகேஷ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே போதையில் இருந்த முருகேஷ்வரியின் மகன்கள் 3 பேரும் சேர்ந்து பதிலுக்கு தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டபோது இந்த கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 8 பேர் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே முக்கிய கொலையாளிகளான விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.