தென்காசியில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
1 min read
Protest against doctors in Tenkasi
19.8.2024
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் நீதி வேண்டிய வேலை நிறுத்த போராட்டம் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும். எனபதை வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் மருத்துவமனைகள் மூடப்பட்டது தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் அப்துல் அஜீஸ், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் மற்றும் குற்றாலம் மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் டாக்டர் பார்வதி சங்கர், டாக்டர் பிராம்ப்டன் பெல், டாக்டர் ராஜசேகரன் டாக்டர் மூர்த்தி, டாக்டர் செல்வ பாலா, ஆகியோர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளரும், தென்காசி மாவட்டத்தின் தலைவருமான டாக்டர் இரா.ஜெஸ்லின் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ கழகம் குற்றாலக் கிளையின் தலைவர் பார்வதி சங்கர் முன்னிலை வகித்தார். இந்திய பருத்துவ சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் அப்துல் அஜீஸ், பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்த சம்பவத்தை வன்மையாக கண்டித்ததோடு இந்த சம்பவத்திற்கு நீதி கிடைத்திட அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய நீதி வழங்குவதோடு பாதிக்கப்பட்ட மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
இந்தப் போராட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும், அரசு மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவர்கள்,தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் என சுமார் 200 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி வேண்டி, மருத்துவமனை வளாகத்தில் நீதி பேரணி நடைபெற்றது. பேரணியில் உயிரிழந்த மாணவிக்கு நீதிவேண்டியும், மற்றும் தேசிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. முடிவில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்காசி மாவட்ட மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் இரா.ஜெஸ்லின் நன்றி கூறினார்.