கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்
1 min read
Kolkata doctor murder case: CBI in Supreme Court Report filing
22.8.2024
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். நாளை வரை (23-ந்தேதி) அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று முன்தினம் வந்தது. அப்போது நீதிபதிகள், பயிற்சி பெண் டாக்டர் படுகொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் சி.பி.ஐ. முதற்கட்ட அறிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், பெண் டாக்டரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதாகவே பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சம்பவம் நடந்து 5வது நாள் மருத்துவமனைக்கு விசாரணைக்காக சென்றபோது குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொல்கத்தா காவல்துறையும் இந்த வழக்கு தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது.