இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்- பிரதமர் மோடி பேச்சு
1 min read
We want to create many Singapores in India – PM Modi speech
5.9.2024
2 நாள் அரசு முறை பயணமாக புருனே சென்ற பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து நேற்று முன்தினம் சிங்கப்பூருக்கு சென்றார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் விடுத்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். 2018-ம் ஆண்டுக்கு பிறகு 5-வது முறையாகவும், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாகவும் மோடி சிங்கப்பூர் சென்று இருக்கிறார். விமானம் மூலம் சிங்கப்பூர் லயன் நகர் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்த நாட்டின் உள்துறை மற்றும் சட்ட மந்திரியும், தமிழ் வம்சாவளியுமான கே.சண்முகம் நேரில் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து, தான் தங்கும் நட்சத்திர ஓட்டலுக்கு மோடி சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் மேளதாளங்களை வாசித்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மோடி மேளம் வாசித்து அனைவரையும் மகிழ்வித்தார்.
அதனை தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்தனர்.
பின்னர் சிங்கப்பூர் பிரதமருடனான உயர்மட்டக் குழுவுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சிங்கப்பூரு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 4ஜி என்று சொல்லப்படும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் மேலும் வளர்ச்சி பெறும்.
சிங்கப்பூர் வெறும் நாடு மட்டும் இல்லை. வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் சிங்கப்பூர் உள்ளது. இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இதற்காக இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு இந்தியா – சிங்கப்பூர் இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. செமி கண்டக்டர்,டிஜிட்டல் டெக்னாலஜி,ஸ்கில் டெவலப்மெண்ட் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.