சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பியது
1 min read
Starliner returns to Earth without Sunita Williams
7.9.2024
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது.
ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் விண்வெளியில் சிக்கி உள்ளனர்
இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளியில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என அமெரிக்க விண்வெளி கழகமான நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளியில் இருந்து இந்திய நேரப்படி நேற்றுமுன்தினம் மாலை பூமிக்கு புறப்பட்டது.
இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலம் நேற்று காலை 9.30 மணிக்கு நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரையிறங்கியது.
பூமியை நெருங்கியபோது விண்கலத்தில் இருந்து பாராசூட் விரிவடைந்தது. அதன்பின் விண்கலம் மெதுவாக தரையில் இறங்கியது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் விண்கலம் திரும்பி உள்ளது. விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.