July 9, 2025

Seithi Saral

Tamil News Channel

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ரெயிலை கவிழ்க்க முயற்சி

1 min read

After Uttar Pradesh, Rajasthan also tried to overturn the train

11.9.2024
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பிவானி-பிரயாக்ராஜ் இடையே காளிந்தி விரைவு ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்ததை கவனித்த அந்த ரெயிலின் ஓட்டுநர் அவசரமாக பிரேக்கை இயக்கி ரெயிலை நிறுத்த முயன்றார்.

எனினும் ரெயில் நிற்பதற்கு முன்பு அந்த சிலிண்டரின் மீது மோதியது. இதில் தண்டவாளத்தைவிட்டு அந்த சிலிண்டர் தூக்கியெறியப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரவு 8.20 மணிக்கு தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்றனர். ரெயில்வே பாதுகாப்புப் படை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில், 4 முதல் 5 கிராம் அளவிலான வெடி மருந்து, திரி, தீப்பெட்டிகள் ஆகியவை இருந்தன. அந்த விரைவு ரெயிலைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டம் என்று சந்தேகிக்கிறார்கள்.

சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் உள்பட 6 பேரை கான்பூர் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில் கவிழ்ப்பு சதி தொடர்பாக விசாரிக்க காவல் துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), உத்தரபிரதேச பயங்கரவாதத் தடுப்பு பிரிவும் விசாரணையைத் தொடங்கி உள்ளது. அதுபோல, மூத்த அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரணை மேற்கொள்ள கான்பூர் காவல்துறையும் தீர்மானித்துஉள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தானிலும் ரெயில் ஒன்றை கவிழ்க்க முயற்சி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்துக்கு என தனி பாதை உள்ளது. அந்த வழித்தடத்தில் சர்தானா-பங்கர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தில் மிகப்பெரிய 2 சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை கண்டதும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார். என்றாலும் ரெயில் அந்த சிமெண்டு பலகை மீது மோதி நின்றது. அந்த 2 சிமெண்டு பலகைகளும் தலா 70 கிலோ எடை கொண்டதாக இருந்தது. ரெயிலை கவிழ்க்கும் சதி திட்டத்துடன் அந்த சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வட மாநிலங்களில் உள்ள ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
ரெயில்கள் கவிழ்ப்பு முயற்சி சம்பவம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹதுல்லா கோரி அண்மையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியாவில் ரெயில் விபத்துகளை ஏற்படுத்தும் சதித் திட்டம் குறித்து அவர் பேசியிருந்தார். எனவே, சமீபத்திய ரெயில் விபத்துகள் பற்றி இந்தக் கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 14 ஐ.எஸ். பயங்கரவாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.