பி.டி. உஷாவிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை: வினேஷ் போகத் குற்றச்சாட்டு
1 min read
P.T. No support from Usha: Vinesh Bhoga alleges
11.9.2024
பாரீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தபோது தன்னை சந்தித்த இந்திய தடகள சங்க தலைவர் பி.டி. உஷா அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் ஆதரவு அளிப்பதுபோல் நடித்தார் வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியின் 53 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திலும் அவர் தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத் தலைவர் பி.டி. உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். மேலும், வினேஷ் போகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் பி.டி. உஷா படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி. உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரீஸிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.
நான் மருத்துவமனையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவதுபோல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி. உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் எனக்கூறுகிறார். இப்படியா ஒருவர் ஆதரவு தருவார்கள். இது வெறும் நடிப்பு. சரியான நடவடிக்கை இல்லை.
இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.