டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி
1 min read
Adishi will be sworn in as the Chief Minister of Delhi tomorrow
20.9.2024
டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த்கெஜ்ரிவால், ராஜினாமா செய்ததால் புதிய முதல்-மந்திரியாக பெண் மந்திரி அதிஷியை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். புதிய மந்திரிசபையில் ஏற்கனவே உள்ள மந்திரிகள் சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால்ராய், இம்ரான் உசைன் ஆகியோர் நீட்டிக்கப்படுவார்கள் என்றும், இவர்கள் தவிர 2 புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. புதியவர்களில் ஒருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என தெரிகிறது.
டெல்லி சட்டசபையில் மொத்தம் 70 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் முதல்-மந்திரி உள்பட அதிகபட்சம் 7 மந்திரிகள் முழு பலத்துடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதல்-மந்திரி தொடர்பான கோப்புகளை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். நாளை (சனிக்கிழமை) பதவியேற்பு விழாவை நடத்த ஆம் ஆத்மி முன்மொழிந்துள்ளது. ஜனாதிபதிக்கு கவர்னர் மூலம் அது பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
பதவியேற்புக்கு பிறகு 26 மற்றும் 27-ந் தேதிகளில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் தனது ஆட்சி பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். 70 பேர் கொண்ட டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.