கடையம் தலைமையில் தனி தாலுகா அறிவிக்க அமைச்சரிடம் கோரிக்கை
1 min read
Request to the minister to declare a separate taluk headed by Kadayam
20.9.2024
தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியை தலைமையிடமாக கொண்டு கடையம் தாலுகா அறிவிக்க வேண்டும்
என்று தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகராட்சி, இலஞ்சி, குற்றாலம், மேலகரம், சுந்தரபாண்டியபுரம் ஆகிய பேரூராட்சிகள், தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குத்துக்கல்வலசை, காசிமேஜர்புரம், பாட்டாக்குறிச்சி, ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, திருச்சிற்றம்பலம், சில்லரைப்புரவு, மத்தளம்பாறை போன்ற ஊராட்சிகளும், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குணராமநல்லூர், ஆவுடையானூர், குலசேகரபட்டி, திப்பணம்பட்டி, அரியப்பபுரம், கல்லூரணி, சிவநாடானூர் ஆகிய ஊராட்சிகளும், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகள், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி மமற்றும் வி.கே.புரம் நகராட்சி அருகில் உள்ள கருத்தப்பிள்ளையூர் ஆகிய பகுதிகள் தென்காசி தாலுகாவில் அமைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய தாலுகாவான தென்காசியில் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இடையில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ளது . இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கடையத்தை தனி தாலுகாவாக அறிவித்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே இது தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையிலும் தனி தாலுகாவாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாவட்ட திமுக சார்பில் அளிக்கப்பட்டிருந்த கோரிக்கை மனுவில் அடிப்படையில், தற்போது, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடையத்தில் தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைந்திட அரசிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் கடையத்தை தனி தாலுகாவாக அறிவித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இதுபற்றி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், ஒன்றிய திமுக செயலாளர்கள் கடையம் தெற்கு ஜெயக்குமார், கீழப்பாவூர் மேற்கு சீனித்துரை, சங்கரன்கோவில் வடக்கு மதிமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சீவநல்லூர் கோ.சாமித்துரை, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் காசிதர்மம்துரை, மகேஷ், ஸ்டீபன் சத்யராஜ், ஹரி கிருஷ்ணன், ராஜேந்திரன், பால்ராஜ். வனராஜ் செல்வகுமார்,சட்டநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.