இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா வெற்றி( 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கையில்)
1 min read
Anura Wins Sri Lankan Presidential Election (2nd Preferential Vote Count)
22.9.2024
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் விருப்ப ஓட்டுகளில் யாருக்கும் 50 சதவீதம் கிடைக்காத நிலையில், இரண்டாம் விருப்ப ஓட்டுக்கள் அடிப்படையில் வெற்றியாளரை தேர்வு செய்தது தேர்தல் ஆணையம்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் முடியும் நிலையில், நேற்று (செப்டம்பர் 21 ) அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் குவிய ஓட்டு சதவீதம் 75 ஆக பதிவானது. தேர்தல் நடந்த அன்றே ஓட்டுகளும் எண்ணப்பட்டன.
அதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமார திசநாயகே 39.52 சதவீத ஓட்டுக்களும், சஜித் பிரேமதாசா 34.28 சதவீத ஓட்டுக்களும் பெற்றனர்.
முதல் விருப்ப ஓட்டு எண்ணிக்கையில் யாருக்கும் 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதனால், 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதன் அடிப்படையில் அனுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை எப்படி நடக்கும் என்பதை காணலாம்..
அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகள் பெற வேண்டும். இலங்கையில் வாக்காளர்கள் அளிக்கும் தரவரிசை வாக்களிப்பை அடிப்படையாக வைத்து அதிபர் தேர்வு செய்யப்படுவார். வாக்காளர்கள் 3 வேட்பாளர்களை தங்கள் முன்னுரிமையாக குறிப்பிடலாம்.
முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை பெறாவிட்டால், 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
2வது சுற்றிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால், வாக்காளர்களின் 3வது விருப்ப ஓட்டுக்கள் பரிசீலிக்கப்படும்.
அனுரா திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவரை தவிர மற்ற வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்.
நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளின் இரண்டாம் விருப்பம் பரிசீலனை செய்யப்படும். அதில் அதிகப்படியான ஓட்டுக்களை பெறுபவர் வெற்றியாளர்.
இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஓட்டு எண்ணிக்கை 2வது சுற்றுக்கு சென்றுள்ளது. இதன் முடிவில் அனுரா வெற்றி பெற்றார்.