தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
1 min read
2 people tried to set fire to the Tenkasi District Collector’s office
1.10.2024
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கும் கூட்டரங்திற்க்குள் வந்த ஒருவர் மாவட்ட ஆட்சியர் முன்பாகவே தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விரைந்து சென்று அவரை பிடித்து வெளியே அழைத்து வந்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரது தலையில் தண்ணீரை ஊற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் அவர் பாவூர்சத்திரம் காந்தி நகர் 2வதுதெரு பகுதியைச் சேர்ந்த மரிய லூர்து என்பவரின் மகன் அல்போன்ஸ் என்பது தெரிய வந்தது. மேலும் அதே பகுதியில் வசித்து வரும் சேர்மத்துரை என்பவர் தன்னிடம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கடந்த 2019-ம் ஆண்டு வாங்கி பல வருடங்கள் ஆகியும் தனக்கு வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.
இது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் இதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே தென்காசி அருகே உள்ள குத்துகல்வலசை காமராஜ் நகரை சேர்ந்த செண்பகவள்ளி என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருகை தந்தார்.அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரது கைப்பையை சோதனை செய்தனர். போலீசாரின் சோதனையில் அந்த பெண் தான் கொண்டு வந்த கைப்பையில் பெட்ரோல் கேன் ஒன்றை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக பெட்ரோல் கேனை போலீசார் பறிமுதல் செய்து செண்பகவள்ளிக்கு அறிவுரை கூறி அவரது வீட்டில் கொண்டு சேர்த்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செண்பகவள்ளி தனது பெற்றோரிடம் உள்ள தனது தங்கை நகைகளை மீட்டு தருமாறு மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த இரண்டு நபர்கள் ஒரே நாளில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மெட்டல் டி டெக்டர் மற்றும் வெடி பொருட்கள் சோதனை பயிற்சி பெற்ற காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த போவதாக கண்காணிப்பாளர் ஸ்ரீசீனிவாசன் தெரிவித்தார்.